Monday, August 03, 2020

நிகழ்காலம்


                      வெற்றிகரமான இந்த மனித சமூகத்தின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற கேள்விக்கு நிகழ்காலம் என்பதே சரியான பதிலாக இருக்க முடியும். இங்கு இப்போது இது நடைபெறுகிறது என்றால் அதற்கு நாம் கடந்த காலத்தில் விதைத்த விதையே முழுகாரணமாக இருக்க முடியும். விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் இதற்கு கர்மா அல்லது முன்வினைப்பயன் என்று பெயர் சூட்டி நமக்கு விளக்குகின்றனர்.

                       வாழ்வு மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம் ஆகிய இரு கண்களைக் கொண்ட ஒரு பிணைப்பு. பிணைப்பு என்று நான்  ஏன் சொல்கின்றேன் என்றால் விஞ்ஞானம் ஆனாலும் சரி மெய்ஞ்ஞானம் ஆனாலும் சரி எந்த ஒரு செயலுக்கும் அதற்கேற்ப விளைவுகள் நிச்சயம் உண்டு. வாழ்வின் சரியான விளக்கம் என்னைப்பொறுத்தவரையில் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் ஆகியவை ஒன்றோடு ஒன்று கலந்ததே.

                        விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கடந்து எதார்த்தம் என்ற பார்வையில் பார்க்கும் பொழுது செய்யும் செயலை முழு ஈடுபாட்டுடன் கவனமாக செய்தால் அதை மீண்டும் திருத்த கூடிய நிலையோ அல்லது அதன் மூலம் ஏற்பட்ட விளைவை நினைத்து வருந்தும் நிலையோ ஏற்படாமல் தடுக்க முடியும். 

                        இந்த உலகில் படிப்பினைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஒரு தெருவில் நடந்து செல்லும் போது ஒரு சிறு கல்லில் நமது கால் விரல் மோதி வலி ஏற்படுவது தொடர்ந்து ஆசை பாசம் முதலியவற்றில் சிக்கி அல்லல் படும் நிலை வரை நம் வாழ்வில் பல இடங்களில் கண்டிருப்போம். 

                        நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாம் செய்த தவறுகள் அல்லது அவற்றின் மூலம் ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் நமது செயல்களை பட்டியலிட்டு அதனை சரி செய்ய முற்பட்டிருந்தால் இன்னொரு புத்தராக உருவெடுத்திருக்கலாம் அல்லது அந்த அனுபவங்களை வைத்து தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்தி இருந்தால் எத்தனையோ புத்தர்களை உருவாக்கிய புண்ணியத்தை தட்டிச் சென்றிருக்கலாம்.

                       தத்துவங்களும் தவறுகளும் இதே உலகில் நாணயத்தின் இரு பக்கங்கள் போல உலவிக்கொண்டு இருக்கின்றன. இதில் வியப்பு என்னவென்றால் தவறு இருக்கும் இடத்திலும் சில சமயம் தத்துவம் உருப்பெறுகின்றன.

                       தவறு நடந்த நிலையில் நடுநிலை என்ற பெயரில் தன்னையும் பெருந்தன்மையாக இணைத்துக்கொண்டு நாம் இப்படி செய்துவிட்டோம் எப்போது மாறப்போகிறோம் என்று கூவுவதில் பயனில்லை. தவறு பொதுமை படுத்தப்படும் போது அதைப்பற்றிய பார்வையும் பொதுமைப்படுத்தப்படுகிறது.

                      தவறு தனியாக திரியும் போதுதான் விளைவுகளை முழுமையாக அனுபவிக்கும். அப்போது தான் அதன் வலி அதனை செய்தவர் மட்டும் அல்ல அதனை வேடிக்கை பார்த்தவர்களையும் நெருங்க விடாது. தவறு சுட்டிக்காட்டப்பட வேண்டும். சில கருத்துக்களின் அவசியம் புரியாமல் போகலாம் அதன் விளைவு பெரிதாகாமல் போகலாம் ஆனால் அதன் தாக்கம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். 

                     சிந்திக்க சிந்திக்க சிந்தனை சிறக்கும். நிகழ்காலம் நெறிப்பட முக்காலம் முறைப்படும்.

                                                         -மதன் mat_thoughts

No comments:

Post a Comment